கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி இரவு மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவி 3 இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர், ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன், மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்ற தவசி ஆகிய 3 இளைஞர்களையும் துடியலூர் அருகே துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் 8 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணையை, அனைத்து மகளிர் நீதிமன்றம் விரைந்த நடத்தியது.
இந்நிலையில், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சாட்சி விசாரணை மற்றும் அனைத்து தரப்பு விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், சனிக்கிழமையான இன்று நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பை அறிவிக்க உள்ளார்.
