சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு : முடித்து வைக்கப்பட்டது நகை திருட்டு வழக்கு : திருடப்பட்டது உண்மைதானா?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான நகை திருட்டு புகாரை நீதிமன்றம் முடித்து வைத்தது.

கோவில் காவலாளி மரணம்

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் மீது கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நிகிதா என்பவர் நகை திருட்டு புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவலாளி அஜித்குமாரை அழைத்து வந்து தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தினர். மேலும், காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல் மரண வழக்கு பதிவு செய்த சிபிஐ, வழக்கில் சம்பந்தப்பட்ட தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்தது.

அதன்பிறகு, இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது. கைது செய்யப்பட்ட காவலர்கள் இன்னும் சிறையில் தான் உள்ளனர். தொடர்ந்து, இந்த வழக்கில் நகை திருட்டு புகார் அளித்த நிகிதாவை விசாரிக்க சிபிஐ தரப்பில் மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம் விசாரணை

அதன்படி, நீதிமன்றத்தில் ஆஜரான நிகிதாவிடம், நகை திருட்டு புகாரை சிபிஐ முடிக்க முடிவு செய்திருப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு நிகிதா ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அது தொடர்பாக எழுத்து பூர்வமாக மனு தாக்கல் செய்ய நிகிதாவுக்கு உத்தரவிடபட்டது. இந்த வழக்கு மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிகிதா நேரில் ஆஜராகி எழுத்து பூர்வ மனு தாக்கல் செய்தார்.

திருடு போனதாக கூறப்படும் நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே நகை திருட்டு வழக்கை முடித்து வைக்கிறோம் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு நிகிதா சம்மதம் தெரிவித்ததன் பேரில் நகை திருட்டு புகாரை நீதிமன்றம் முடித்து வைத்தது.

நகை திருடு போனதா?

இருப்பினும், உண்மையில் நகை திருடு போனதாக என்று சமூக ஆர்வலர்களும், உயிரிழந்த அஜித்குமாரின் உறவினர்களுக்கும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *