இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து ட்ரீம் 11 நிறுவனம் விலகியுள்ளதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான ஸ்பான்சர்களில் ஒன்றாக ட்ரீம் 11(Dream11 நிறுவனம் இருந்தது. கடந்த 2023 ஜூலை மாதம் ஒப்பந்தத்தின்படி சுமார் 358 கோடி ரூபாய்க்கான ஸ்பான்சர்ஷிப்பை ட்ரீம் 11 நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இதனால் இந்திய அணி விளையாடும் ஒரு சர்வதேச போட்டிக்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாய் என்ற கணக்கில் இந்திய வீரர்களின் ஜெர்சியில் ட்ரீம் 11 நிறுவனம் இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைத்து வந்தது.
இந்நிலையில் 3 ஆண்டுகள் கடந்துள்ள சூழலில் ட்ரீம் 11 நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. அந்த ஒப்பந்தத்தில் இருந்து ட்ரீம் 11 விலகியுள்ளது. இதையடுத்து புதிய ஸ்பான்சர்ஷிப்பை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில், மத்திய அரசு ஆன்லைன் சூதாட்டச் செயலிகளுக்கு எதிராக புதிய கடுமையான சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
இதன் மூலம், பல்வேறு மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. ட்ரீம் 11 நிறுவனம், ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்தாலும், பலரும் இதை ஆன்லைன் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகவே பார்க்கிறார்கள். எனவே, இந்த ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியிருக்கலாம் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.