மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் மிகப் பிரம்மாண்ட விழாவுக்கான ஏற்பாடுகள் பாஜக சார்பில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள அம்மா திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.
அதிமுக தலைமையிலான கூட்டணி
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி அணி), தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சில கட்சிகள் கூட்டணியில் இணையும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிக தொகுதிகளை கேட்கும் பாஜக
இந்நிலையில், அதிமுகவில் இன்னும் கூட்டணியே இறுதி செய்யப்படாத நிலையில், அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான பாஜக, தொகுதி பங்கீட்டிற்கு சென்றுவிட்டது. அக்கட்சி 56 தொகுதிகளையும், ஆட்சியில் பங்கும் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுகவோ 30-க்கு மேல் தொகுதிகள் தர முடியாது, ஆட்சியிலும் பங்குதர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று காலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், இம்மாதம் இறுதியில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பாஜகவுக்கான தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதை இப்போது சொல்ல முடியாது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை வரும் மோடி
வரும் 23-ம் பிரதமர் நரேந்திரமோடி மதுரை வர இருக்கிறார். அன்றைய தினம் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள அம்மா திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.

இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்
